Website Designed By Assistia Inc

உலகிலேயே மிக சிறிய செயற்கைகோள் கண்டுபிடித்து தமிழ்நாடு மாணவர்கள் சாதனை

4

உலக அளவில் மிகவும் சிறிய அளவிலான 3 செ.மீ. அளவுள்ள செயற்கைகோளை கரூர் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர்.

இந்த செயற்கைகோள், 2021-ம் ஆண்டு அமெரிக்காவின் நாசாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கியூப் இன் பேஸ் என்ற நிறுவனம் நாசாவுடன் இணைந்து ஆண்டுதோறும் மாணவர்களுக்கு இடையே போட்டியை நடத்தி வருகிறது.

இதில் தேர்வு பெறும் மாணவர்களின் செயற்கை கோளானது நாசாவின் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும். இந்த போட்டியில் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பார்கள்.

இதனையடுத்து, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அட்னன், தென்னிலையை சேர்ந்த அருண் ஆகிய இரண்டு பேரும் கரூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியிலும், அரவக்குறிச்சி அருகேயுள்ள நாகம்பள்ளியை சேர்ந்த கேசவன் கோவையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.

இப்போட்டியில் கலந்து கொண்ட இவர்கள் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தின் வழிகாட்டி உதவியுடன், 3 சென்டி மீட்டரில் 64 கிராம் எடையுள்ள செயற்கைகோளை கண்டுபிடித்துள்ளனர். இந்த செயற்கைக்கோள் நாசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

73 நாடுகளை சேர்ந்த 25 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் 80 கண்டுபிடிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில், கரூர் மாணவர்களின் கண்டுபிடிப்பும் ஏற்று கொள்ளப்பட்டதோடு, 3 பேருக்கும் சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்களின் இந்த சிறிய அளவிலான செயற்கைகோள் அடுத்த ஆண்டு (2021) ஜூன் மாதம் நாசாவின் விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல்கலாமை முன்னோடியாக கொண்டும் ஒரு ஆண்டுக்கும் மேலாக பாடுபட்டு 3 செ.மீ. அளவுள்ள, 64 கிராம் எடையில் இந்த செயற்கைகோளை கண்டுபிடித்திருக்கிறோம்.

இந்த செயற்கைகோளில் இன்போர்சுடு கிராப்னி பாலிமர் எனப்படும் மெட்டலைவிட 100 மடங்கு உறுதி வாய்ந்த பொருளை கொண்டு இதன் வெளிப்புறத்தை வடிவமைத்துள்ளோம். இதை விண்ணில் செலுத்தினால் உலகிலேயே மிகச் சிறிய மற்றும் லேசான செயற்கைகோளாக இது வலம் வரும்.

இந்த செயற்கைக்கோளில் 13 சென்சார்கள் இருக்கிறது. இதன்மூலம் நம்மால் 20-க்கும் மேற்பட்ட அளவுகளை (பாராமீட்டர்ஸ்) பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், ராக்கெட்டிற்குள் நிகழும் காஸ்மிக் கதிர்களின் தன்மையை பற்றி இந்த செயற்கைக்கோள் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கு தேவையான சக்தியானது செயற்கைக்கோளின் மேற்புறத்தில் உள்ள சோலார் செல்களில் இருந்து கிடைக்கும்.

இதனை உருவாக்க ரூ.1 லட்சம் தேவைப்பட்டது. ஒரு வருடமாக கஷ்டப்பட்டு இதை உருவாக்கியுள்ளோம். இந்த செயற்கை கோள் உருவாக்க சில தனியார் அமைப்புகள் மற்றும் ஏராளமானோர் எங்களுக்கு நிதியுதவி வழங்கினார்கள்.

எதிர்காலத்தில் இதைவிட பெரிய அளவிலான செயற்கைகோளை உருவாக்கி அதில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே எங்களது லட்சியம். இதை நோக்கி நாங்கள் செல்வோம் என்று தெரிவித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.